Saturday, August 28, 2010

யாராவது காப்பாற்றுங்கள்...! ப்ளீஸ்...!


கதவிடுக்கில் நுழைந்திருந்த தினசரி கண்ணில் பட்டது.தூக்கத்திலேயே நடந்து மெதுவாய் கையில் எடுத்தேன்,வழக்கமான பரபரப்பு தொற்றிக்கொண்டது.வேகமாக புரட்ட ஆரம்பித்தேன். நான் தேடுவது அரசியல்,சினிமா,விளையாட்டுஅல்லது வணிகச் செய்திகள் அல்ல.எங்காவது நிகழும் 'தற்கொலைச்செய்திகள்!'.

தற்கொலைச் செய்திகள் ஏதாவது ஓரத்தில்தான் இருப்பதால்,பெரும்பாலும் தேட நேர்கிறது.சில நேரங்களில் 'ஆளின்' முக்கியத்துவம் பொருத்து பெரியதாகவோ கட்டம் கட்டியோ போட்டிருப்பார்கள்.அப்போது என் வேலை எளிதாகிறது.

இன்றைய செய்தி நான்காவது பக்கத்தில் சிக்கியது.இறந்தவனுக்கு சுமார் 30 வயதிருக்கலாம்.(உன் வயதுதான் இருக்கும். நீயெல்லாம்....என் மனசு சொல்ல ஆரம்பித்தது.)

இரயில் முன் பாய்ந்திருந்தான்.அடையாள அட்டையை வைத்து ஆளை கண்டுபிடித்திருந்தார்கள்.சென்னைக்கு அருகில்தான் அவன் வீடு. நேரில் போய் விடலாம்.

தற்கொலை பற்றிய செய்தியைப்பார்த்தவுடன் நேரே சென்று, உடல் அப்புறப்படுத்தப்படாத பட்சத்தில், மாலை அணிவித்து சம்பவம் பற்றிய முழு விவரங்களை அறிந்து வருவேன்.உடனடியாக முடியாவிட்டாலும் கூட குறித்து வைத்துக் கொண்டு வேறொரு நாள் சென்று வருவேன்.

என்னைப்பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது!என் வயது 32.ஐ.டி. கம்பெனிகளில் 10 வருட அனுபவம். நல்ல வேலையும், சம்பளமும்.அக்கா,தங்கைக்கு சிறப்பாய் திருமணம் செய்து கொடுத்தாயிற்று.ஒரு தங்கை படித்துக்கொண்டு இருக்கிறாள்.தாய்,தந்தையர் நலமாய் சொந்த வீட்டில் இருக்கிறார்கள்.தங்கைக்கு அப்புறம் என் திருமணம் என முடிவு செய்திருக்கிறேன்.

'தற்கொலை' மீது என்னுடைய கவனம் எனக்கு 10 வயது இருக்கும் போது,தெருக்கோடியில் ஒருவர் மரத்தில் தொங்கியிருந்ததைப் பார்த்த போது ஆரம்பித்தது.அந்த வயதில் பயமாய் இருந்தது.உயிரைப் பற்றிய கேள்விகள் எழுந்து அதுவே பின் ஆர்வமானது.இப்பொழுது உயிரை விடுபவர்களை பார்க்கும் போது ஆச்சரியமாயிருக்கிறது.சிறு காயங்களுக்கே துடித்து போகும் மக்கள் மத்தியில்,உயிரை போக்கி கொள்ள எவ்வளவு மன வலிமை வேண்டும் என நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியம் அடங்க மாட்டாததாய் இருக்கிறது.

இரயிலில் அடிபட்டு இறந்தவனை பார்த்துவிட்டு திரும்பும் போது நண்பன் மொபைலில் அழைத்தான்.காத்திருந்த அவனையும் பிக் அப் பண்ணிக் கொண்டு புதிதாய் பிரபலமான ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றோம்.

நல்ல ருசியான சாப்பாடு.சீக்கிரம் முடித்தாக வேண்டிய ப்ராஜக்ட் பற்றியும் பேசிவிட்டு வெளியே வந்தோம்.

சுமார் 25 மாடிகளுக்கு பிரம்மாண்டமாய் இருந்த அந்த ஹோட்டலை அண்ணாந்து பார்த்தேன். நண்பனை அனுப்பி விட்டு நான் மட்டும் மேலே சென்று பார்க்க தீர்மானித்தேன்.

லிப்டில் நின்றிருந்த செக்யூரிட்டி வேலை முடியவில்லை,போகவேண்டாம் என்றான்.சரி என்று சொல்லிவிட்டு மேலே ஏறிவிட்டேன்.

அவ்வளவு உயரத்தில் இருந்து ஊரை பார்க்கவே பிரம்மாண்டமாய் இருந்தது!.காற்றின் வேகமும் பயமுறுத்தியது.

மெதுவாய் நடந்து விளிம்பிற்கு வந்தேன்.கீழே எட்டிப்பார்க்கையில் மனிதர்கள் சிறு புள்ளியாய் தெரிந்தார்கள்.

'குதி...! குதி...! குதித்துவிடு !' என உள்ளிருந்து ஒரு குரல் உந்தியது.

தங்கைகள், அவர்களின் குழந்தைகள்,வேலை, நண்பர்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்து முயற்சியை பின்னுக்கிழுத்தது.

மனதை சிரமப்பட்டுத் திருப்பி,திரும்ப எத்தனிக்கையில்,ஓரத்தில் இருந்த காலியான பேரல் ஒன்று உருண்டு வந்து....என்னைத் தள்ளியே விட்டது!

ஐய்யோ...! யாராவது காப்பாற்றுங்கள்...ப்ளீஸ்!

Wednesday, August 18, 2010

நடிகர்கள் தேர்தலில் நிற்கத் தடை!


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அரசாங்க நலத்திட்டங்களோ வேறு சலுகைகளோ அறிவிக்கக்கூடாது என்ற தேர்தல் கமிஷனின் சட்டம் நடைமுறையில் இருக்கிறது.வாக்காளர்களை ஒரு தலைப்பட்சமாக ஓட்டளிக்கத் தூண்டுவதை தடுக்கவே இச்சட்டம் இருக்கிறது.

நடிகர்கள் சினிமாவின் மூலம்,பொய்யான பிம்பங்களின் மூலம் நியாயமற்ற முறையில் மக்களை தூண்டத்தானே செய்கிறார்கள்.

ஓட்டளிக்கும் வயது வந்த ஒருவன் தாய்,தந்தை,குரு அல்லது நண்பன் இவர்களில் யார் பேச்சையாவது இரண்டு மணி நேரம் தொடர்ந்து கேட்பானா? ஆனால் மக்களை கட்டிப்போடும் சக்தி சினிமாவுக்கு இருக்கிறது.

இதைத் திட்டமிட்டு பயன்படுத்துபவர்கள் உளவியல்ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

காலையில் பள்ளிக்கூட நேரத்தில் ரோட்டின் குறுக்கே வண்டியை நிறுத்தி வைத்து ஒருவன் இடையூறு செய்யும் போது 'அவ்ர்' வந்து காப்பாற்றி விடுவார் என நம்பும் மக்கள் நிஜ வாழ்வில் பொது நலனுக்கு போராடும் டிராபிக் ராமசாமியை தோற்கடிக்கிறார்கள்.

நடிகர்களுக்கு சினிமா உருவாக்கும் பிம்பம் மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை.

வளர்ந்த கட்சிகளும் ஊடகங்களை தங்கள் வசம் வைத்துக்கொண்டு மாய பிம்பங்களை ஏற்படுத்துகின்றன.

தேர்தல் என்பது ஊடக பலம் உள்ளவர்களுக்கும்,இல்லாதவர்களுக்கும் இடையே நடக்கும் போது, உளவியல் ரீதியாக ஆராய்ந்து,முதலில் சொன்ன தேர்தல் கமிஷனின் சட்டம் சரி என்றால், நடிகர்கள் தேர்தலில் போட்டியிடுவது தவறுதானே

Monday, August 9, 2010

எந்ந்த்த்திரா...எந்ந்த்த்திரா...


மலேசியாவில் பிரம்மாண்டமாய் நடந்த எந்திரன் ஆடியோ ரிலீஸை இரண்டு நாட்களாய் தமிழகம் கண்டுகளித்தது.சுமார் ஆறுமணி நேர ஒளிபரப்பின் விளம்பர வருவாயிலும்,ஆடியோ விற்பனையிலும் தனது முதலை எடுக்க ஆரம்பித்திருக்கிறது சன் நிறுவனம்.

'உசுரே போகுதே...உசுரே போகுதே...' போன்று கேட்டவுடன் பிடிக்கும் பாடலோ, 'கடாக் கறி அது அடுப்புல கெடக்கு' என்று வித்தியாசமாய் தாக்கும் பாடலோ இல்லை.

படம் வெளியானபின் ரஜினியால் பாடல்கள் மேலும் ஹிட்டாகலாம்.
-------------------------------------------------------------------------------------

ரிஸ்ட் வாட்ச் போன்று ஒரு உபகரணம் கட்டிய இடது கையை தாங்கிப்பிடித்து,காலை விந்தியபடி குகை போன்ற பகுதிக்குள் நுழைந்தான் அவன். சுருண்டு கிடக்கும் பாம்பை பார்க்கிறான். சிகப்பும்,பச்சையுமாய்,ஒரு வெப்ப உடலாய், ஸ்கேன் செய்ததுபோல் திரையில் தெரிகிறது.அந்த ஆப்பிரிக்க அமெரிக்கன் படுத்து விடுகிறான்.வெர்ச்சுவல் ஸ்கிரீனில் தோன்றும் ஒருவர் உன் சார்ஜ் குறைவாக உள்ளது என்கிறார்.

அவன் நினைவிலிருந்து காட்சிகள் விரிகின்றன.

ஒரு ஆய்வகத்தில்,ஒரு சேரில் ரோபோவாக.. வெளிப்புறம் வயரும், நட்டும்,போல்ட்டுமாக அமர்ந்திருக்கிறான்.
விஞ்ஞானி அவனுடன் பேசியபடி வெளிப்புறம் எப்படி இருக்க வேண்டும் என்கிறார்.டி.வி.யில் பேஸ்கட் பால் விளையாடும் 'ஜோர்டனை' அவன் காண்பிக்க 'குட் டேஸ்ட்' என்று சிரிகிறார்.

'சோலோ' என்று பெயரிடப்பட்ட அவன் ஒரு ஆயுதமாக உருவாக்கப்படுகிறான்.15 பேரின் பலம் அவனுக்கு உண்டு.சில பைபர்களை கொண்டு உருவாக்கப்பட்டதால் சிறு ஆயுதங்களால் பாதிப்பில்லை என்று விஞ்ஞானி விளக்குகிறார்.

படதின் பெயர் தெரியாமல் பாதியிலிருந்து டி.வி.யில் பார்த்த ஆங்கிலப்படமிது.முழுதும் பார்க்கவும் இல்லை.
-------------------------------------------------------------------------------------

Sydney Sheldon-ன் Tell Me Your Dreams நாவல் படித்திருக்கிறீர்களா.

அது ஒரு ‘அந்நியின்’ கதை. நமது விக்ரம் அந்நியன் என்றால் கதை நாயகி 'அந்நி' தானே!

Multiple Personality Disorderஐ பற்றிய சுவராசியமான கதை அது.படித்து பாருங்கள்.

Saturday, August 7, 2010

திருடன்...போலீஸ்...மந்திரி..!




சுமார் 35000/-கோடியில் நடக்கும் காமன் வெல்த் போட்டியில் ஊழல்.கல்மாடி சிக்கியிருக்கிறார்.

சொராபுதீன் கொலையில் குஜராத் உள்துறை மந்திரி அமித்ஷாவின் தொடர்பு பற்றி சி.பி.ஐ.விசாரிக்கிறது.

பீகாரில் 50 கொள்ளையர்கள் சேர்ந்து ரயிலில் கொள்ளை அடித்துள்ளனர்.

இவை சமீபத்திய செய்திகள்.

50 பேர் பங்கு வைச்சாங்கான்னா என்ன தேறும்? தப்பான business strategy! கொள்ளையர்களின் பாஸ் கவனிச்சு வேற பிளான் பன்னுங்க!கொஞ்சம் முயற்சி செஞ்சா மந்திரி ஆகிறலாம்!

அப்புறம்..சின்ன வயசில திருடன்..போலீஸ் ..விளையாடும் போது இந்த மந்திரிய ஏன் விட்டுடோம்னு தெரியல.இதுல விளையாடும் போது நாந்தான் போலீஸ்னு சண்டைகள் வேற!( நேர்மையாம்!)

இனிமேலாவது வெளையாட்டுல மந்திரிய சேர்க்கனும்!

கன்ஸ்யூமர் உலகத்தில் தெருவிளையாட்டுகள் தொலஞ்சி போச்சே!சரி..வீடியோ கேம்ஸ்களிலாவது மந்திரிகளுக்கு இடம் கொடுக்கவேண்டும்!

Thursday, August 5, 2010

ஏய் ஞானம்...அப்பா ஞானம்...





குறைந்த நுழைவுக்கட்டணத்தில்
அதிகக் கூட்டம்.

இந்த நகரில் மூன்று நாள் மட்டும்...

குவளை குவளையாய் ஞானம்
வழங்கப்பட்டது.

தவளைப்பெண்களின் நாக்கு
பொன்னிறமானது.

ஞான குருவின் ஒளிவட்டம்
ஒரு சுற்று பெருத்தது.

ஒரு குவளை பருகிய நான்
ஞானத்தில் ஊறிக்கிடந்தேன்.

கொடையாளர்களை தெரிந்த ஒருவன்
ஞானகுருவானான்.