Saturday, October 31, 2009

திருவேங்கடா..!

ஒவ்வொருத்தராய் கொல்வதற்கு
சலித்துப்போனான்.
மொத்தமாய் குழியிறக்கி,
புல்டோசர் ஏற்றி...
ஆயிரமாயிரம் முற்றுப்புள்ளிகள்.

லட்சமாய்
அவலக்குறிகள்
முகாம்களில்.

எஞ்சியவை
கேள்விக்குறிகளாய்
புலம்பெயர்ந்து.

ஆச்சரியக்குறியாய்
உலகின் இறுகியமெளனம்.

இதையெல்லாம் செய்தவனின்
ஆண்குறியை
அறுத்தால் என்ன.

Wednesday, October 28, 2009

நிகழ்ந்து விடுமோ.

நாளை பற்றி
பேசிய ஒரு நாளில்தான்
நிச்சயமானது உனக்கு.

பின் வந்த நாட்களில்
நினைவுகளை கிழித்த படி
வீதியில் நடந்து வந்தேன்.

உன் வீட்டருகேயும்
வந்து விட்டேன் ஓர் நாள்.

காற்றில் பறந்த நினைவொன்று
உன் அழைப்பு மணி அருகே.

நீ
வந்து விடுவாயோ
என்ற பதட்டத்தில் நின்றேன்
நான்.

Monday, October 26, 2009

கவிதைத்துளிகள்.

நாம் சொல்லிக்கொடுக்கிறோம்
என்பதுதான் துரதிர்ஷட்ம்.
மற்றபடி பாக்கியவான்கள்
குழந்தைகள்.


-----------------------



உள்ளும் புறமும் சத்தம்.
மூடப்பட்ட கதவு.
ஆலயம்.

Saturday, October 24, 2009

ஒழிந்து போகட்டும்!

சட்டமிடப்பட்ட
சவவாழ்க்கை.

எப்போதேனும் விழுகிறது
சாரலோ
ஒளிக்கீற்றோ.

பெருமழை பெய்யினும்
தீயே பற்றியும்
சட்டமுடைத்தா வெளியேறுகிறது
வாழ்க்கை?

நாங்கள் மொத்தமும்
சவக்கூட்டமாய் ஆனபின்பு
இதைப்பற்றி பேசியென்ன.
சொல்லிப்போனான்
ஈழத்தமிழன்.

விண்கல் மோதட்டும்
உங்கள் புவி மீது
என்றும் சொன்னான்.

கடல் ஊர்புகும்.
தூசு மண்டலமாய்
எங்கும் இருள் சூழும்.

அப்புறம்
புதிய உயிர் தோன்றுமோ!

Thursday, October 22, 2009

என் வழி.

வாழ்க்கை புறந்தள்ளிப் போக
நடுத்தெருவில் நிற்கும் நிலை
அநேகருக்கு நேர்கிறது.

நானும் நின்றேன் ஓர் நாள்.

பயணச் சீட்டு இல்லாதவன்
போய்க்கொண்டுதான் இருந்தான்.

வழி தெரியாது பயனித்தவன்
வழி சொல்லிப் போனான்.

எல்லைக்கோட்டருகே
ஆமைகளைப் பார்த்தபோது
மூச்சிரைத்தது எனக்கு.

சாதுர்யம் கற்று
கனவுகளைத் தொலைத்த
ஓர் கணத்தில் தென்பட்டது
எனக்கென ஒரு வழி.

Thursday, October 15, 2009

ஹைகூ 2

மழை ஓய்ந்த பின்னும்
சட்டென்று பெருந்துளிகள்.
காற்றில் ஆடும் மரம்.

------------------------

மின்னி மறைந்து
தாழப் பறந்தது
மின்மினி.
அவள் கண்கள்.

Wednesday, October 14, 2009

ஹைகூ.

சுத்தமாய் அறை.
கட்டிலின் கீழ் குப்பை.
மனசு.


------------------------


காலில் சுட்டது
நசுக்காத சிகரெட்.
(மத)பேச்சுவார்த்தைகள்.

Thursday, October 8, 2009

காதல்


சிலர் சைவம்.
சிலர் அசைவம்.

சிலருக்கு வான்.
சிலருக்கு மண்.

சிலருக்கு நெருஞ்சி.
சிலருக்கு காக்காமுள்.

நிறைய ஆய்ந்தும்
நிறைவுறாத ஆய்வு.

விபத்து.
இருப்பினும்
பெட்டிச்செய்தி அல்ல!

காலம் காலமாய்
நடக்கும் கண்கட்டு வித்தை.

உணர்ந்தவரெல்லாம் சொன்னபின்பும்
பொழிப்புரை தேவைப்படும் இலக்கியம்!

அது, அதுவானால்
அதுவே சொல்லும்
ஆன்மீகம்!

Saturday, October 3, 2009

ர(ரு)சித்தது!

பிறந்து விழுந்தவுடன்
நடக்கத் துவங்கியதை
அதிசயமாய் பார்த்ததுண்டு.

விளிம்புகளில் ஓடுவதில்
உடலின் பளபளப்பில்
லாவகமாய் உடல் வளைத்து
அந்தரத்தில் தாவுவதில்
மனசெல்லாம் கரைந்ததுண்டு.

தாயைச் சரியாக கண்டு
முட்டிப் பால் குடிக்கும்
மந்தையில் ஒருவனாய்
நின்றதுண்டு.

காதணி விழா ஒன்றில்
குறும்பாட்டுக்கறியை
ருசித்த நாள்வரை
மனதில் இருந்தன
ஆட்டுக்குட்டிகள்!