Saturday, August 28, 2010

யாராவது காப்பாற்றுங்கள்...! ப்ளீஸ்...!


கதவிடுக்கில் நுழைந்திருந்த தினசரி கண்ணில் பட்டது.தூக்கத்திலேயே நடந்து மெதுவாய் கையில் எடுத்தேன்,வழக்கமான பரபரப்பு தொற்றிக்கொண்டது.வேகமாக புரட்ட ஆரம்பித்தேன். நான் தேடுவது அரசியல்,சினிமா,விளையாட்டுஅல்லது வணிகச் செய்திகள் அல்ல.எங்காவது நிகழும் 'தற்கொலைச்செய்திகள்!'.

தற்கொலைச் செய்திகள் ஏதாவது ஓரத்தில்தான் இருப்பதால்,பெரும்பாலும் தேட நேர்கிறது.சில நேரங்களில் 'ஆளின்' முக்கியத்துவம் பொருத்து பெரியதாகவோ கட்டம் கட்டியோ போட்டிருப்பார்கள்.அப்போது என் வேலை எளிதாகிறது.

இன்றைய செய்தி நான்காவது பக்கத்தில் சிக்கியது.இறந்தவனுக்கு சுமார் 30 வயதிருக்கலாம்.(உன் வயதுதான் இருக்கும். நீயெல்லாம்....என் மனசு சொல்ல ஆரம்பித்தது.)

இரயில் முன் பாய்ந்திருந்தான்.அடையாள அட்டையை வைத்து ஆளை கண்டுபிடித்திருந்தார்கள்.சென்னைக்கு அருகில்தான் அவன் வீடு. நேரில் போய் விடலாம்.

தற்கொலை பற்றிய செய்தியைப்பார்த்தவுடன் நேரே சென்று, உடல் அப்புறப்படுத்தப்படாத பட்சத்தில், மாலை அணிவித்து சம்பவம் பற்றிய முழு விவரங்களை அறிந்து வருவேன்.உடனடியாக முடியாவிட்டாலும் கூட குறித்து வைத்துக் கொண்டு வேறொரு நாள் சென்று வருவேன்.

என்னைப்பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது!என் வயது 32.ஐ.டி. கம்பெனிகளில் 10 வருட அனுபவம். நல்ல வேலையும், சம்பளமும்.அக்கா,தங்கைக்கு சிறப்பாய் திருமணம் செய்து கொடுத்தாயிற்று.ஒரு தங்கை படித்துக்கொண்டு இருக்கிறாள்.தாய்,தந்தையர் நலமாய் சொந்த வீட்டில் இருக்கிறார்கள்.தங்கைக்கு அப்புறம் என் திருமணம் என முடிவு செய்திருக்கிறேன்.

'தற்கொலை' மீது என்னுடைய கவனம் எனக்கு 10 வயது இருக்கும் போது,தெருக்கோடியில் ஒருவர் மரத்தில் தொங்கியிருந்ததைப் பார்த்த போது ஆரம்பித்தது.அந்த வயதில் பயமாய் இருந்தது.உயிரைப் பற்றிய கேள்விகள் எழுந்து அதுவே பின் ஆர்வமானது.இப்பொழுது உயிரை விடுபவர்களை பார்க்கும் போது ஆச்சரியமாயிருக்கிறது.சிறு காயங்களுக்கே துடித்து போகும் மக்கள் மத்தியில்,உயிரை போக்கி கொள்ள எவ்வளவு மன வலிமை வேண்டும் என நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியம் அடங்க மாட்டாததாய் இருக்கிறது.

இரயிலில் அடிபட்டு இறந்தவனை பார்த்துவிட்டு திரும்பும் போது நண்பன் மொபைலில் அழைத்தான்.காத்திருந்த அவனையும் பிக் அப் பண்ணிக் கொண்டு புதிதாய் பிரபலமான ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றோம்.

நல்ல ருசியான சாப்பாடு.சீக்கிரம் முடித்தாக வேண்டிய ப்ராஜக்ட் பற்றியும் பேசிவிட்டு வெளியே வந்தோம்.

சுமார் 25 மாடிகளுக்கு பிரம்மாண்டமாய் இருந்த அந்த ஹோட்டலை அண்ணாந்து பார்த்தேன். நண்பனை அனுப்பி விட்டு நான் மட்டும் மேலே சென்று பார்க்க தீர்மானித்தேன்.

லிப்டில் நின்றிருந்த செக்யூரிட்டி வேலை முடியவில்லை,போகவேண்டாம் என்றான்.சரி என்று சொல்லிவிட்டு மேலே ஏறிவிட்டேன்.

அவ்வளவு உயரத்தில் இருந்து ஊரை பார்க்கவே பிரம்மாண்டமாய் இருந்தது!.காற்றின் வேகமும் பயமுறுத்தியது.

மெதுவாய் நடந்து விளிம்பிற்கு வந்தேன்.கீழே எட்டிப்பார்க்கையில் மனிதர்கள் சிறு புள்ளியாய் தெரிந்தார்கள்.

'குதி...! குதி...! குதித்துவிடு !' என உள்ளிருந்து ஒரு குரல் உந்தியது.

தங்கைகள், அவர்களின் குழந்தைகள்,வேலை, நண்பர்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்து முயற்சியை பின்னுக்கிழுத்தது.

மனதை சிரமப்பட்டுத் திருப்பி,திரும்ப எத்தனிக்கையில்,ஓரத்தில் இருந்த காலியான பேரல் ஒன்று உருண்டு வந்து....என்னைத் தள்ளியே விட்டது!

ஐய்யோ...! யாராவது காப்பாற்றுங்கள்...ப்ளீஸ்!

6 comments:

Jey said...

சொல்ல வந்தது புரியுது...ஆனாலும் புரியலை...:)
நேரா விளக்கம் கேட்டுக்கிறேன்.

பனங்காட்டு நரி said...

//// யாராவது காப்பாற்றுங்கள்...ப்ளீஸ்! ////

இதோ வந்துட்டேன் !!!!!!!!!!!

பனங்காட்டு நரி said...

//// கதவிடுக்கில் நுழைந்திருந்த தினசரி கண்ணில் பட்டது.தூக்கத்திலேயே நடந்து மெதுவாய் கையில் எடுத்தேன்,வழக்கமான பரபரப்பு தொற்றிக்கொண்டது.வேகமாக புரட்ட ஆரம்பித்தேன்.///

ஹி ஹி ஹி என்னை போலவே இருக்கான் ...கதை லாஸ்ட்ல இவனை தான் கொல்ல போறீங்களா

velji said...

ஆஹா... நரியார் வந்தாச்சு போல...வருக..வருக..(பனை மரங்கள் வளர்க்கனுமோ!?)

என்ன ...உன்ன மாதிரியே இருக்கானா...அப்படின்னா மொதல்லேயே...!

Chitra said...

different ஆன கதை. ம்ம்ம்ம்.....

ப.செல்வக்குமார் said...

ஐயோ , சத்தியமா கலக்கலா இருக்குங்க.!
எழுத்து நடை பட்டைய கிளப்புது..!

Post a Comment