Sunday, July 28, 2013

என் மகள் எழுதிய கதைகள்!

5ஆம் வகுப்பு படிக்கும் ,என் மகள் அமிர்தவர்சினியின் ஆங்கில கதைகள் இவை. என் தந்தையார் எழுதிய கவிதைகளுடன் இணைத்து ,உறவோடும்,நட்போடும் என்ற புத்தகமாக வெளிடப்பட்டுள்ளது.விழாவில் அவள் பேசிய காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது!














உங்கள் வார்த்தைகளில் அவளை உற்சாகப்படுத்துங்கள்!


Tuesday, November 6, 2012


கடல்

ஆதி உயிரைத் தந்தவள்
இன்னும் பெயர் அறியா
பல உயிர்களையும் கொண்டவள் !

புவியின் நீர்ப்போர்வை.

தரையில் கிடக்கும் வானம்.

சிறு அலைகள் தந்து உறவாடுவாள்.
பேரலைகள் தந்தும் இடர் தருவாள்

அள்ளக்குறையாத அமுத சுரபி

விரிந்து கிடக்கும் பெருஞ்செல்வம் !

___________________________________________________

மழை

கருமேகக் கூட்டம் கண்டு
மகிழ்வுடன் மயில்கள் ஆடும்
வரப் போகும் மழை கண்டு
நம் வருத்தமெல்லாம் கரைந்து போகும்.

அரசன் வருவதை
அறிவிக்கும் பறை போல
மழை வருவதை அறிவிக்கும்
குளிர்காற்று

முத்துகளாய் விழத் துவங்கும்
பின் கம்பிகளாய் நீண்டு விழும்
காற்றுடன் நடனமிடும்
வானவில்லை மாலையிடும் .

நீரின்றி அமையாத
இப்புவியை காக்க
மழையை ரசிப்போம்
மரங்களையும் வளர்ப்போம்!

_____________________________________________________________-

குழந்தை.

மெல்லிய நீரோடை
கால் நனைக்கும் கடல் அலை .

சுத்தமான காற்று
சுகந்தமான நறுமணம் .

சாலையோர மரங்கள்
மாலை நேரத் தேநீர் .

நிலவின் பொன்னொளி
மனம் மயக்கும் மெல்லிசை .

........................................
.......................................

அம்மை அப்பனை
சுற்றிய கணபதியை போல் ,
இவை போல அனைத்தும் கிடைக்கும்
ஒரு குழந்தையை சுற்றினால் !

_____________________________________________________-

முயற்சி

தட்டினால் கல்லும்
சிலையாகும்.
தயங்கினால் மணலும்
மலையாகும்.

கடலைக் கடந்ததும் முயற்சி
கண்டங்கள் அளந்ததும் முயற்சி .
வானில் பறந்ததும் முயற்சி
பின் நிலவைத் தொட்டதும் முயற்சி.

வாழ்வின் ஆதாரம் முயற்சி
வரலாறு படைப்பதும் முயற்சி .

முயற்சி இன்மையே ஊனம்
முயற்சித்தால் வசப்படும் வானம்.

__________________________________________________

நட்பு

பள்ளியில் பூக்கும் உறவு
பல காலம் தொடரும் உறவு
கல்லூரியில் இணையும் உறவு
கடைசி வரை வரும் உறவு .

நம்மைத் தேர்ந்தெடுக்கும்
உறவல்ல .
நாமே தேர்ந்தெடுக்கும்
உறவு.

நல்ல நட்பு
மேன்மை தரும்.
கூடா நட்பு
கேட்டைத்தரும்.

துண்பத்தில் தோள் தரும் .
இன்பத்தை இரட்டிப்பாக்கும் .
வாழ்ந்தால் நட்புடன் வாழ்
நட்பில்லா வாழ்வு பாழ் .

______________________________________________

பள்ளிக்கூடம்

வாழ்வை செப்பனிட
மனிதரை உருவாகும்
பட்டறை.

எண்ணற்ற தாவரங்களை
வளர்த்து விடும்
விளைநிலம் .

வருடம் முழுவதும்
பிள்ளை சுமக்கும்
கர்ப்பிணி .

அறியாமை இருளகற்றும்
சூரியன் .
எழுத்தறிவிக்கும் கடவுள்களின்
ஆலயம்.

____________________________________________________________-

அறிவியல் வளர்ச்சி

கற்களில் ஆயுதம் செய்தான்
கற்கால மனிதனவன் .
வில் அம்பு கண்டான்
வேட்டையாடி வாழ்ந்து வந்தான் .

கல்லைத் தட்டி நெருப்பு கண்டான்
உணவைச் சமைக்க கண்டான்.
வேளாண்மை அறிந்த மனிதன்
ஆற்றங்கரைகளில் நாகரிகம் கண்டான்.

சக்கரம் கண்ட மனிதன்
வளர்ச்சியில் வேகமானான் .
வானை அளந்தான்
கடல் மீனை அளந்தான் .

கானக மனிதனவன்
கம்ப்யூட்டர் மனிதனாகிவிட்டான்!

-ஒரு பள்ளி நிகழ்ச்சிக்காக ,நண்பன் வேலு ரமணிக்கு எழுதியது. ஒரே அமர்வில் எழுதியது என்பது முக்கியத்துவம் பெறுவதாக
நினைக்கிறேன்!

Saturday, September 1, 2012

ரோசாப்பூவு ........

ரோசாப்பூவு   தூங்கப்போகுது
பாடுறேன்  ஒரு பாட்டு
நான் பாடுறேன் ஒரு பாட்டு
வார்த்தைய தேடுறேன் வார்த்தைய தேடுறேன்
தேனும் பாலும் தொட்டு
நல்ல தேனும் பாலும் தொட்டு


சூரியனார் பகலில் வந்து
ஆடிக்களிச்சாங்க
விளையாடி ஓய்ஞ்சாங்க
இப்ப சந்திரனார் பக்கம் வந்து
காவல் இருக்காங்க -உனக்கு
காவல் இருக்காங்க
உன்னழகை நட்சத்திரம் ஒன்னு
மின்னி மின்னி பாத்துச்சும்மா
அது மின்னி மின்னி பாத்துச்சும்மா ...
மொத்தக்கூட்டத்தையும் கூட்டிவந்து
முழிச்சு கிடக்குதம்மா
கண் மலர்திக்கிடக்குதம்மா ...                             (ரோசாப்பூவு...)

ஆசிரியர்  சொல்வதெல்லாம்
அறிவுப்பாடமம்மா
அந்த கல்வி செல்வமம்மா
அம்மா அப்பா சொல்வதெல்லாம்
அனுபவப்பாடமம்மா
அது அன்புப்பாடமம்மா


நண்பரைசேர்த்து  உறவைபெருக்கி
நாளும் வளரணுமே
 நீ நாளும் வளரணுமே
நாலும் தெரிஞ்சி ஊரும் புரிஞ்சி
நல்லா வாழனுமே
நீ நல்லா வாழனுமே ....                                 (ரோசாப்பூவு .....)

நாளைய  உலகை  ஆளப்போற
இப்ப தூங்கு அம்மு ...
நீ இப்ப தூங்கு அம்மு

அம்மு  செல்லக்குட்டி ....
அம்மு  வெல்லக்கட்டி ....
அம்மு சீனிக்கட்டி .....


இது என் மகளுக்காக எழுதிய தாலாட்டுப்பாடல்.கொஞ்சம் லேட்டா அவளோட 9 வயசுல எழுதினது.ஆனா அவ ரொம்ப சந்தோசப்பட்டா....
                                        

Sunday, October 17, 2010

21 தங்கம்,28 வெள்ளி, 26 வெங்கலம்-ஒரு சாதனை!



15-10-2010 அன்று கமலா சுப்ரமணியம் பள்ளி,தஞ்ஞாவூரில் பள்ளிகளுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட SDAT(Sports Development Authority of Tamilnadu) திருநெல்வேலி மாணவர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். 21 தங்கம், 28 வெள்ளி, 26 வெங்கல பதக்கங்களை வென்று அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.

16 - 10 - 2010 ல் நடைபெற்ற விழாவில் அமைச்சர் மைதீன்கான் அவர்களால் பாராட்டப்பெற்றனர்.

புகைப்படத்தில் மாணவர்களுடன் அமர்ந்திருப்பவர் பயிற்றுனர் பிரேம்குமார் அவர்கள். அவரின் பயிற்சியும்,ஊக்கமும் துணைவர மாணவர்கள் தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை குவித்து வருகிறார்கள். சரத் சடையப்பன், சேது மாணிக்கவேல், ஆதித்ய ஜுவாலா ஆகிய மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த சாதனையாகும்.

சிறார்களின் பயிற்சியில் வள்ளி,மகாராஜன் ஆகிய பயிற்றுனர்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.

அண்ணா ஸ்டேடியம் என்று நெல்லை மக்களால் பரவலாக அறியப்படும் இடத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்திற்கு வாய்ப்புள்ளவர்கள் நேரில் வந்தால் பலன்பெறலாம். நீச்சல் பயிற்சி மாணவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாக இருக்கிறது. ஆரோக்கியம் மேம்படுகிறது. போட்டிகளும்.பரிசுகளும்,சான்றிதழ்களும் வேறு!



இது, 2 தங்கம், 2 வென்கலப்பதக்கங்கள் வென்ற என் மகள் அமிர்தவர்ஷினி!

Thursday, September 30, 2010

புத்தகம்.




அலையும் மனசு

பக்கங்களுக்குள்

சிக்குவதில்லை

சில நேரங்களில்.



உலகைப்புறந்தள்ளி

எங்கோ சஞ்சரிக்கவும்

வாய்க்கிறது

சில புத்தகங்களில்.



முகம் மறைத்து

பிழைக்கவும் முடிகிறது

சிலரிடமிருந்து!


சரி!

ஒரு நல்ல மனிதனின்

வரவிற்குப் பின்

புத்தகத்தில் என்ன இருக்க முடியும்!

Friday, September 17, 2010

வேலுவின் பக்கங்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம்,போச்சம்பள்ளியில் அண்ணாஅறிவகம் பள்ளியில் +2 படித்த மாணவர் பள்ளி பேருந்து மோதி உயிரிழந்தார்.இதைத் தொடர்ந்து பள்ளியும் ,தாளாளர் வீடும் தாக்கப்பட்டது.இதைக் கண்டிக்கும் விதமாக மெட்ரிக் பள்ளிகள் இன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இது ஜனனாயக உரிமை என்றாலும்,காலாண்டுத் தேர்வு நடைபெறும் நேரத்தில் திடீரென்று நேற்று அறிவிக்கப்பட்ட விடுமுறை லட்சக்கணக்கான மாணவர்களை கருத்தில் கொள்ளாத நடவடிக்கை.

மெட்ரிக்பள்ளிகள் இயக்குனர் அரசின் சார்பில் கடும் நடவடிக்கை இருக்கும் என அறிவிக்க இன்று காலை ஆரம்பித்தது திண்டாட்டம்.7.45க்கு மகளை எழுப்பி அவசரமாய் கிளப்பி, விட்டு வந்தாயிற்று.இல்ல மத்த ஸ்கூல்லாம் லீவுதானாம் என்கிற வதந்தி தொடர்ந்தது.இருக்கும் மாணவர்களை கொண்டு பள்ளி தொடர்ந்து நடைபெறுகிறது.

பள்ளிக்கட்டணம் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டபின்புதான் இந்த தனியார்பள்ளிகள் சங்கம் தெரிய ஆரம்பித்திருப்பதும்,இது கோடீஸ்வரர்களின் சங்கம் என்பதால் கட்சிகளுக்கு single window collection point என்பதும் இதில் உள்ள அரசியல்.


அரசின் அறிவிப்பு

வருகிற 24ம் தேதி பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து தரப்பு மக்களும் அமைதியுடன் ஒத்துழைத்து நாட்டின்வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கவேண்டும் என்ற செய்தி அரசால் வெளியிடப்பட்டுள்ளது.இது அரசின் பாராட்டத்தக்க முயற்சி.

ஒரு SMS

Marriage is an institution where a boy loses his bachelor degree when a girl gains her masters.

Sunday, September 12, 2010

அழகு வழியுது!




முகம் மறைத்த

விரல்களின் வழி

கசியுது நிலவொளி.

பொங்கி வரும்

உலையென!

பொங்கலோ பொங்கல்

என கூவத்துவங்குது மனசு!