Tuesday, November 6, 2012


கடல்

ஆதி உயிரைத் தந்தவள்
இன்னும் பெயர் அறியா
பல உயிர்களையும் கொண்டவள் !

புவியின் நீர்ப்போர்வை.

தரையில் கிடக்கும் வானம்.

சிறு அலைகள் தந்து உறவாடுவாள்.
பேரலைகள் தந்தும் இடர் தருவாள்

அள்ளக்குறையாத அமுத சுரபி

விரிந்து கிடக்கும் பெருஞ்செல்வம் !

___________________________________________________

மழை

கருமேகக் கூட்டம் கண்டு
மகிழ்வுடன் மயில்கள் ஆடும்
வரப் போகும் மழை கண்டு
நம் வருத்தமெல்லாம் கரைந்து போகும்.

அரசன் வருவதை
அறிவிக்கும் பறை போல
மழை வருவதை அறிவிக்கும்
குளிர்காற்று

முத்துகளாய் விழத் துவங்கும்
பின் கம்பிகளாய் நீண்டு விழும்
காற்றுடன் நடனமிடும்
வானவில்லை மாலையிடும் .

நீரின்றி அமையாத
இப்புவியை காக்க
மழையை ரசிப்போம்
மரங்களையும் வளர்ப்போம்!

_____________________________________________________________-

குழந்தை.

மெல்லிய நீரோடை
கால் நனைக்கும் கடல் அலை .

சுத்தமான காற்று
சுகந்தமான நறுமணம் .

சாலையோர மரங்கள்
மாலை நேரத் தேநீர் .

நிலவின் பொன்னொளி
மனம் மயக்கும் மெல்லிசை .

........................................
.......................................

அம்மை அப்பனை
சுற்றிய கணபதியை போல் ,
இவை போல அனைத்தும் கிடைக்கும்
ஒரு குழந்தையை சுற்றினால் !

_____________________________________________________-

முயற்சி

தட்டினால் கல்லும்
சிலையாகும்.
தயங்கினால் மணலும்
மலையாகும்.

கடலைக் கடந்ததும் முயற்சி
கண்டங்கள் அளந்ததும் முயற்சி .
வானில் பறந்ததும் முயற்சி
பின் நிலவைத் தொட்டதும் முயற்சி.

வாழ்வின் ஆதாரம் முயற்சி
வரலாறு படைப்பதும் முயற்சி .

முயற்சி இன்மையே ஊனம்
முயற்சித்தால் வசப்படும் வானம்.

__________________________________________________

நட்பு

பள்ளியில் பூக்கும் உறவு
பல காலம் தொடரும் உறவு
கல்லூரியில் இணையும் உறவு
கடைசி வரை வரும் உறவு .

நம்மைத் தேர்ந்தெடுக்கும்
உறவல்ல .
நாமே தேர்ந்தெடுக்கும்
உறவு.

நல்ல நட்பு
மேன்மை தரும்.
கூடா நட்பு
கேட்டைத்தரும்.

துண்பத்தில் தோள் தரும் .
இன்பத்தை இரட்டிப்பாக்கும் .
வாழ்ந்தால் நட்புடன் வாழ்
நட்பில்லா வாழ்வு பாழ் .

______________________________________________

பள்ளிக்கூடம்

வாழ்வை செப்பனிட
மனிதரை உருவாகும்
பட்டறை.

எண்ணற்ற தாவரங்களை
வளர்த்து விடும்
விளைநிலம் .

வருடம் முழுவதும்
பிள்ளை சுமக்கும்
கர்ப்பிணி .

அறியாமை இருளகற்றும்
சூரியன் .
எழுத்தறிவிக்கும் கடவுள்களின்
ஆலயம்.

____________________________________________________________-

அறிவியல் வளர்ச்சி

கற்களில் ஆயுதம் செய்தான்
கற்கால மனிதனவன் .
வில் அம்பு கண்டான்
வேட்டையாடி வாழ்ந்து வந்தான் .

கல்லைத் தட்டி நெருப்பு கண்டான்
உணவைச் சமைக்க கண்டான்.
வேளாண்மை அறிந்த மனிதன்
ஆற்றங்கரைகளில் நாகரிகம் கண்டான்.

சக்கரம் கண்ட மனிதன்
வளர்ச்சியில் வேகமானான் .
வானை அளந்தான்
கடல் மீனை அளந்தான் .

கானக மனிதனவன்
கம்ப்யூட்டர் மனிதனாகிவிட்டான்!

-ஒரு பள்ளி நிகழ்ச்சிக்காக ,நண்பன் வேலு ரமணிக்கு எழுதியது. ஒரே அமர்வில் எழுதியது என்பது முக்கியத்துவம் பெறுவதாக
நினைக்கிறேன்!