Saturday, November 28, 2009

ஆத்திரத்தை அடக்கினாலும்..

ரவை?

கிலோ 30 ரூபாய்.
ரேஷனில் இன்னும் குறையும்.


துப்பாக்கி?

தீபாவளிக்கு வாங்கியது.
மகளுக்கு.


புலி?

வீட்டில் பயன்படுத்துவது
புலி மார்க் புளி.


நவம்பர் 27?

கூட்டுத்தொகை 9.
நல்ல நம்பர்.


பிரபாகரன்?

முன்பு சத்யத்தில் இருந்தான்.
வேறெதிலோ இருக்கிறான் இப்போது.


தமிழ்..

உங்கள் கேள்விகளை நிறுத்துங்கள்.
அவசரமாய் ஒன்னுக்கு போகணும்.

Thursday, November 19, 2009

ஹைக்கூ.

இறங்கும் வழியில்
ஏறினார்கள்.
ஏறும் வழி இல்லை.

-------------------------

மொட்டை மாடியில்
நிலவு நேரம்.
மீறித்தெரிந்தது
மூக்கின் உறுத்தல்.

Wednesday, November 11, 2009

திருஷ்டி.

என்னையும் மகளையும்
சுற்றிவைத்த சூடம்
எரிகிறது.

யார் கண்ணையாவது
எரிக்கும் வேளையில்
எங்களையும் எரிப்பார்கள்
வேறு வாசலில்.

கண்களிலிருந்து விடுதலை
சாத்தியமாக இல்லை.
கண்கள் துரத்தாத வாழ்வும்தான்.

'சூடம் நன்றாக எரிகிறதே'
எனப்பார்க்கும் கண்ணுக்கும்
சாத்தியமிருக்கிறது.

Friday, November 6, 2009

கையைஉதறுவதென்பது..

செடியுடன்
ஒரு வண்ணத்துப்பூச்சி.

இரை தருவதாய் சொல்லி
ஒரு ஜோடி சிட்டுக்குருவி.

கிடாயை சமாளித்து
தாயிடமும் சொல்லிவிட்டு
ஒரு ஆட்டுக்குட்டி.

இரவில்தானே மின்னுவேன்
என்றதற்கு
பரவாயில்லை என்று சொல்லி
ஒரு மின்மினியை.

எல்லாம் அழைத்துக்கொண்டு
ஒரு பொன்மாலைப்பொழுதில்
உன்னிடம் வந்தேன்.

நிமிர்ந்து பார்த்து
எழுதுவதை தொடர்ந்தாய்.
எதற்கோ உன் கையை உதறிய போது
உடன் வந்த எல்லாமும்
ஓடிப்போயின.

உன்னிடம் சொல்வதற்கு
ஒரு கவிதையும் இருந்தது.